மரபுக் கட்டடக்கலை கட்டமைப்பு முறை
ஸ்தபதி.வே.இராமன்
பகுதி 1 – (சிற்ப நூல்கள்)
அறிமுக உரை:
‘பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றும்
கரக்கோயில் கடிபொழிற்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக்கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே’
அப்பர் பெருமான் தம் எளிய தமிழில் பெருங்கோயில், கரக்கோயில்,
ஞாழற்கோயில், கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் என
பல்வகைக் கோயில்களைப் பற்றி பேசுகிறார். பல்லவர் காலத் தொடக்கத்திலும்
இறுதியிலும் கோயில்களின் தோற்றத்தை இலக்கியம் மற்றும் கல்வெட்டுச்
சான்றுகள் மூலமாகவே அறிய இயலுகிறது.
இத்தகைய கோயில்களை அறிந்துக் கொள்வதன் வாயிலாக நம்முடைய கலாச்சாரம்,
பண்பாடு, சிற்பிகளின் கட்டுமானத்திறன், தொழில் நுணுக்கம், தத்துவம்,
விஞ்ஞானம் இவற்றோடு நம்முடைய பக்தியையும் முழுமையாக அறிந்துக் கொள்ள
முடிகிறது.
சங்க காலத்தில் முறையோடு வகுத்துக் தொகுக்கப்பட்ட மனைநூல்கள் இருந்தனவெனச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம்.
‘நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடம்,
மயன் பண்டிழைத்த மரபினது தான்’
எனும் சிலப்பதிகார அடிகள் அக்காலத்தில் சிற்ப நூல்களும், சிற்பிகளும் இருந்தனர் என்பதனை உணர்த்துகிறது.
கோயில்களை நிர்மானம் செய்திட, கட்டடக் கலைநூல் அறிந்த புலவர் இருந்தனர் அவர்களை நூலறிப்புலவர் என்றழைத்தனர்.
‘நூலறிப்புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வநோக்கிப் பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து
ஒழுங்குடன் வளை இய ஒங்குநிலை வரைப்பின்’
தொண்மையான கோயில்கள் சிற்ப ஆகம மரபுப்படியே அமைந்தன என்பதனை ஆய்வுகள் உணர்த்துகின்றன.2
கோயிற்கலை தொன்றுதொட்டுத் தந்தை மகனுக்கும், பின்னவன் தன்
மகனுக்குமாக வழிவழியாக கற்பிக்கப்பட்டு பயின்றுவரப்பெற்ற உன்னத கலை.
தந்தையின் தொழிற்கூடமே மகன் பயிலும் இடமாகும். பகலில் தொழிற் பயிற்சியும்,
இரவில் நூற்பயிற்சியும் நிகழும். பயிற்சியும் படிப்பும் இணைத்தே செல்லும்.
சிற்பக் கலைஞன் கைவினைஞனாகவும், கணித அறிவு பெற்றவனாகவும்,
அளவிலக்கணம் அறிந்தவனாகவும், கலைவளம் தெரிந்தவனாகவும், ஓவியனாகவும்,
பல்வேறு கலை மரபுகளை உணர்ந்தவனாகவும், வரலாறு, இலக்கியம் கற்றவனாகவும்
இருத்தல் வேண்டும் என சிற்பநூல்கள் சிற்பியின் தகுதியை
வெளிப்படுத்துகின்றன. வேத வித்தனாக இருத்தல் வேண்டும் என மானசாரம்
சிற்பநூல் கூறுகிறது.
திருக்கோயில் சிற்பங்கள் காட்சிப் பொருள்கள் அல்ல. கண்ணால் காண
முடியாத ஒரு பொருளை அறிவால் உணர்ந்து அவ்வுணர்வினைக் கலை வடிவாய் நம் கண்
முன் கொண்டு வருவது சிற்பக் கலையின் சிறப்பாகும்.
மானசாரம் என்ற கட்டடக்கலை நூல் 32 வகையான சிற்ப நூல்களை சுட்டிகாட்டுகிறது.
1. விசுவகர்மீயம்
2. விஸ்வம்
3. விஸ்வசாரம்
4. பிரபோதம்
5. விருத்தம்
6. மயமதம்
7. துவஷ;டாதந்த்ரம்
8. மனுசாரம்
9. நளம்
10. மானவிதி
11. மானகல்பம்
12. மானசாரம்
13. பெகுஸ்ருதம்
14. சிருஷ;டம்
15. மானபோதம்
16. விஸ்வபோதம்
17. ஆதிசாரம்
18. விசாலாஷம்
19. விஸ்வகாஸ்யபம்
20. வாஸ்துபோதம்
21. மகாதந்தரம்
22. வாஸ்துவித்யாபதி
23. பாராசரீயகம்
24. காலயூபம்
25. சைத்யம்
26. சித்திரம்
27. ஆவர்யம்
28. சாதகசார சம்ஹிதை
29. பானுமதம்
30. ஐந்திரமதம்
31. லோகக்னம்
32. சௌரம்
அங்ஙனமே மனுசாரம் என்ற சிற்ப-கட்டடக் கலை நூலில் இருபத்தெட்டு சிற்ப
நூல்களின் பெயர்களைக் காண்கிறோம். அவற்றுள் மேற்கண்ட பட்டியலில் இடம்
பெறாத கீழ்க்கண்ட நூல்களையும் இதன் மூலம் அறிகின்றோம்.
1. ஈசானம்
2. சித்ரகாஸ்யபம்
3. பிரயோகம் மஞ்சரி
4. பெருஹிதம்
5. பௌத்தமதம்
6. கௌதமம்
7. குலாலம்
8. வாசிஷ;டம்
9. மனோகல்பம்
10. பார்க்கவம்
11. மார்க்கண்டம்
12. கோபாலம்
13. நாரதீயம்
14. நாராயணீயம்
15. காஸ்யபம்
16. சித்ரபாமளம்
17. சித்ராகுல்யம்
18. தேசிகம்
இவைகளில் பெரும்பாலானவை இன்றில்லை. இன்று நம்மிடையே கீழ்க்கண்ட நூல்களே தங்கியிருக்கின்றன.
1. மயமதம்
2. விஸ்வகர்மீயம்
3. மானசாரம்
4. ஐந்திரமதம்
5. மனுசாரம்
6. காஸ்யபம்
இவை சிற்பக்கலை பற்றியும், கட்டடக்கலை பற்றியும் ஒருமித்துப் பேசும் முழு நூல்களாம். இவற்றுக்கு வாஸ்து சாஸ்திரம் என்றும் பெயர். சாரஸ்வதீயம், பிராம்மீயம், சகளாதிகாரம் போன்ற நூல்கள் சிற்ப அமைப்பு இலக்கண நூல்களாக அமைகின்றன.3
சிறப்க்கலை இலக்கண நூல்கள் குறைவாக இருப்பினும், முற்காலச்
சிற்பிகள் இலக்கியங்களாகப் படைத்த கலைச் சின்னங்கள் பலவுள. இவையாவும்
நமக்குக் கிடைத்த இலக்கணம் என்றால் மிகையல்ல.
மாமல்லபுரம் குடைவரைக் கோயில்களும், ஒரு கல் கோயில்களும்,
கட்டுமானக் கோயில்களும் எந்தச் சிற்பநூல் துணைக் கொண்டு எழுப்பப் பட்டன?
அறிய இயலவில்லை.
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், தஞ்சாவூர் ராஜராசேச்சரம் கோயில்,
திருவெற்றியூர்த் தூங்கானை மாடக்கோயில் மற்றும் தாராசுரம், திருபுவனம்,
புள்ளமங்கை போன்ற ஊர்களில் அமைந்த கோயில்களின் கட்டுமான அமைப்பு, இலக்கண
நூல்கள் யாமறியோம்.
பெருந்தச்சன் என்பவனே இன்றைய நாளில் சிற்பி என்றும், ஸ்தபதி எனவும்
அழைக்கப்படுகின்றனர். ஸ்தபதி எனப்படுவோர் கல், மண், மரம், செம்பு, சுதை,
கடுசர்க்கரை, செங்கல், தந்தம், மெழுகு, வண்ணம் ஆகிய பத்து வகைப்
பொருள்களில் ஏதேனும் ஒன்றில் உருவங்கள் படைக்கும் கைவினைஞர் ஆவார்.
பொருள்களின் தன்மையினால் செய்முறை வேறுபடலாம். ஆனால் இலக்கணம் கலை நுட்பம்
யாவும் பொதுவானவையாகும்.
இறைவன் வாழும் இல்லம் – உடலும், கோயிலும்
பொதுவாக கோயிலானது கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம், சாவகாச
அந்தராளம், மகா மண்டபம், திருச் சுற்றுக்கோயில்கள், திருச்சுற்று, வாகன
மண்டபம், திருமதில் என்றவாறு அமையும் படம்.1
கோயில்கள் நமது உடம்பின் வடிவிலேயே அமைவதாய் உள்ளது. அதாவது கிடந்த
மனித உடம்பில் உள்ள பாதங்கள் மண்டபமாகவும், தொடை நிருத்த மண்டபமாகவும்,
தொப்புள் பலிபீடமாகவும், மார்பு மகா மண்டபமாகவும், கழுத்து அர்த்த
மண்டபமாகவும், சிரசு கர்ப்பகிரகமாகவும் அமையப் பெற்றுள்ளன.
அதுபோல அதிட்டானம் முதல் தூபி வரை உறுப்புகள் முறையே அடி, கால்,
தோள், கழுத்து, தலை, முடி ஆகிய மனித உடலின் உறுப்புகளுக்கு ஒப்பிடுவர்
அறிஞர்கள்.
இதுவரை மரபு கட்டடக்கலை கோயில்கள் இலக்கணம் கூறும் சிற்பநூல்கள்
குறித்து அறிந்து கொள்ள முன்னுரையாக குறிப்புகள் தரப்பட்டது. இதனை
தொடர்ந்து சிற்ப அளவு முறைகள், திருக்கோயில் அங்கங்கள் குறித்து பேசலாம்.
பயன்பட்ட நூல்கள் :
1. மா.சந்திரமூர்த்தி 2010 உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு மலர்
2. ஸ்தபதி.வே.இராமன் 1993 வரலாறு இதழ் 1
3. வை.கணபதி ஸ்தபதி 2001 சிற்பச் செந்நூல்
ஆசிரியர் பற்றி: திரு. ஸ்தபதி இராமன்
Source: சங்கம் – Sangam http://arivarsangam.wordpress.com/
If you want to get advice from India's best southern hemisphere vastu consultant so get in touch with Dr. Anand Bhardwaj.
ReplyDeleteVastu For Southern Hemisphere Vastu for Southern Australia Vastu in Western Australia Vastu in Southern Hemisphere Southern Hemisphere Vastu for Home Vastu for Shops
DR Vinay Orthopedic Hospital
ReplyDeleteTrauma Care Treatment in Kadapa
ReplyDelete