மரபுக் கட்டடக்கலை கட்டமைப்பு முறை
ஸ்தபதி.வே.இராமன்
பகுதி 1 – (சிற்ப நூல்கள்)
அறிமுக உரை:
‘பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றும்
கரக்கோயில் கடிபொழிற்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக்கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே’
அப்பர் பெருமான் தம் எளிய தமிழில் பெருங்கோயில், கரக்கோயில்,
ஞாழற்கோயில், கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் என
பல்வகைக் கோயில்களைப் பற்றி பேசுகிறார். பல்லவர் காலத் தொடக்கத்திலும்
இறுதியிலும் கோயில்களின் தோற்றத்தை இலக்கியம் மற்றும் கல்வெட்டுச்
சான்றுகள் மூலமாகவே அறிய இயலுகிறது.
இத்தகைய கோயில்களை அறிந்துக் கொள்வதன் வாயிலாக நம்முடைய கலாச்சாரம்,
பண்பாடு, சிற்பிகளின் கட்டுமானத்திறன், தொழில் நுணுக்கம், தத்துவம்,
விஞ்ஞானம் இவற்றோடு நம்முடைய பக்தியையும் முழுமையாக அறிந்துக் கொள்ள
முடிகிறது.